Powered By Blogger

Tuesday, April 3, 2012

வாய்ப்பு தேடி அலைந்த கதை...4..




வாய்ப்பு தேடி அலைந்த கதை.......4

அடுத்த நாள் காலை வின் டிவி வாசலுக்கு வரும் போது அந்த 5 மாடி கட்டிடத்துக்கே சொந்தக்காரன் போல உள்ளே நுழைந்தேன்....

நடையில் ஒரு தெளிவு இருந்தது......ஒரே மூச்சில் 5 மாடியை படி வழியே ஏறினேன்.  வரவேற்பு பெண் வழக்கம் போல் ஒரு சிரிப்பை உதிர்த்தாள். வருகை பதிவேட்டை கேட்ட போது என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள்.. அது எதுக்கு ........ இது அவள்
கையெழுத்து போட தான்......
அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை....... சிரித்துக்கொண்டே வருகை பதிவேட்டை எடுத்து மேசை மீது வைத்தாள்.......

இரண்டாவது பக்கத்தில் என் பெயர் இல்லை......

எனக்கு குழப்பமாக இருந்தது..... பெயரை நாமே எழுதி விடலாமா.....?
மணி பார்தால் 9.37 ..... 
அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்....
சார் ஒண்னும் சொல்லலியா.....?
என்னை இன்னிலேர்ந்து கையெழுத்து போட சொன்னாரே.....!
அவளுக்கு என்னை பார்க்க பாவமாக இருந்திருக்க வேண்டும்..... எப்ப சொன்னார்..... ? நேத்து நான் கிளம்புற வரைக்கும் எதுவும் சொல்லலியே...? என்றாள்
என்கிட்ட சொன்னார் என்றேன்....... 
எப்ப.....?  
1 மணிக்கு...... 
ராத்திரி ஒரு மணிக்கா.....?
ம்....

அப்ப... அதுவரைக்கும்.. அவளுக்கு புரிந்தது.... மோகன் வந்தாச்சா என யாரிடமோ கேட்டாள்.... வரல .... வர நேரம் தான் என அவுட் பிளாக் வாய்ஸ் மட்டும் வந்தது.....
நீங்க வெய்ட் பண்ணுங்க ஞானராஜ்....... என் பெயரை மிக அழகாக அழுத்தம் திருத்தமாக உச்சரித்தாள்...
நான் அந்த மோகனுக்காக காத்திருந்தேன்....... அவன் ரெட் ஹில்சில் இருந்து காலையில் கிளம்பி எம்.டி. தேவனாதன் வீட்டிற்க்கு போய் அங்கிருந்து. சி.ஈ.ஓ. பிளாரண்ட் வீட்டிற்கும் போய் விட்டு 9.30 மணிக்கு அலுவலகம் வருவான்.. எத்தனை மணிக்கு வீட்டில் இருந்து கிளம்புவான் என தெரியாது. பஸ் பயணம் தான். ஆனால் அலுவலகம் வரும் போது நெற்றியில் வைத்த குங்குமமும். விபூதியும் கலையாமல் இருக்கும்..... எனக்கு அவன் இன்றைக்கும் ஆச்சரியமானவன் தான்.......

மோகன் வந்து கையெழுத்து போட்டான். கையோடு என் பெயரை எழுதினான். ஞானராஜ் யாரு சார்..? 

நான் தான் என்றேன்..
நீங்க தானா அது.... சினேகமாய் சிரித்தான்.... வாங்க கையெழுத்து போடுங்க என்றான்.

...................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................கையெழுத்து போட்டு விட்டு என்ன செய்யனும் என்றேன்...... சார் வந்து சொல்வார் என்றான்...... அது அந்த பெண்ணிற்கு புதிதாய் இருந்திருக்க வேண்டும்....

எங்க ஆத்துக்காரர் கச்சேரிக்கு போறார் கதையாக... நானும் போய் வந்து கொண்டிருந்தேன்.... ஒரு வேலையும் எனக்கு கொடுக்கப்பட வில்லை....அனைவரும் பரபரப்பாக வேலை செய்ய நான் தூங்கி வழிந்து கொண்டிருந்தேன்......

ஒரு நாள் ஒரு இயக்குனரோடு என்னை உதவியாளனாக அனுப்பினார்கள்.... அது “ நமக்கேன் வம்பு” என்ற அரசியல் நையாண்டி நிகழ்ச்சி.... இயக்குனர் வண்டி இருக்கா .....? போட் கிளப்புக்கு வந்துடு. ......? என சொல்லி விட்டு கிளம்பினார்.. 
போட் கிளப்பா அது எங்கிருக்கு...?  ஒரு வழியாக கண்டு பிடித்து போய் சேர்ந்தேன்...... அங்கு எனக்கு முன்னாடி ஒரு ஆட்டோவில் அமர்ந்து சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார் இயக்குனர்..

என்னை முறைத்தபடி ... ஏன் இவ்வளவு நேரம்.... சீக்கிரமா வரனும் புரியுதா.... என சொல்லிய படி ஸ்கிரிப்ட் பேடை என்னிடம் தினித்தார்... பயபக்தியோடு அதை வாங்கி கொண்டேன்....

பஸ்ட் டைலாக் என்னப்பா....? என்றார்.... அக்குளுக்குள் வைத்த பேடை பார்த்து.... அத பாத்து சொல்லுயா.. என்றார்.... அப்போது தான் எனக்கு உரைத்தது.... அவர் கேட்பது என்னை தான் என்று..

பேடை எடுத்தால் அது ஒரு 10-15 பக்கம் இருக்கும்..... முதல் பக்கத்தில் ஒரு ஆட்டோ வருவது என எழுதி இருந்தது...... சார் ஆட்டோ வருது என்றேன்....
பின்ன வராம நிக்குமா.....!  ஜோக்காம்......?

சரி ஆட்டோவ வர சொல்லு.. கணபதி நீங்க கேமராவ இங்க வைங்க......

ஆட்டோ வாப்பா.... என்றேன்....

யோவ் ... என்னயா.... ஆட்டோவ அந்த தெரு முனையில் இருந்து வர சொல்லு.... நீ அங்க போய்யா......

எனக்கு ஆரம்பமே சரியாக படவில்லை........!

எடுத்தார் ..... எடுத்தார்... எடுத்துக்கொண்டே இருந்தார்...... மத்தியானம் பிரியாணி கொண்டு வந்தான் மோகன்....... நல்ல பசி... 

மாலை 4 மணி வரை ஆட்டோவை பல கோணங்களில் எடுதுக்கொண்டிருந்தார்... பேக் அப் சொல்லும் வரை ஆட்டோ தான் ஒரு டைலாக் கூட எடுக்க வில்லை ..... நாளைக்கு இதே லொக்கேஷன் .... இதே காஸ்டியூம் கண்டினியூட்டி ஞாபகம் வச்சிக்கங்க.. என்றார்... 

அடுத்த ஒரு வாரம் போனது அந்த ஷூட்டிங் நடை பெற வில்லை.... அடுத்த சில நாட்களில் அவர் வேலைக்கு வர வில்லை.....

ஆபிசில் இவ்வாறு பேசினார்கள்.....
கலையில் இருந்து சாயந்திரம் வரை ஆட்டோ வருது.... போவுது.....  ரெண்டு பீட்டா கேசட் காலி பண்ணி இருக்கன்யா....

அடுத்த சில நாட்களில் அங்கு பணி புரிந்த “மெய்யழகன்”  நண்பரானார்..... அவருக்கு அந்த நிகழ்ச்சி ஒதுக்கப்பட்டது. உதவிக்கு நானே அனுப்பப்பட்டேன்..... 
இவர் கையில் பேட் இல்லை.... ஒரு 5 பக்கம் மடித்து வைத்திருந்தார்.... காலை 9 மணிக்கு அதே இடத்தில் ஆரம்பித்த ஷூட் மாலை 5 மணிக்கு ஒரு எபிசோட் முடிந்திருந்தது.

 மிக அழகாய் ஷாட் பிரித்தார்...சுலபமாய் எடுத்தார்.... நடித்த ராஜன் .... பாலாஜி. இருவரும் இதுக்கு தான்யா ‘மெய்’ வேணுங்கறது என்றார்கள்....

இரவு எடிட் முடிந்தது.... காலையில் அனைவரும் பார்த்து ‘குட்’ என்றார்கள்.  நான் ஒருவன் தான் உதவியாளன் என்பதால்.. எனக்கு இணை-இயக்குனர் என டைட்டில் போட்டர்... 

ஓமகுச்சி நரசிம்மன், உதயா மற்றும் நான்..
வீரப்பா எங்க இருக்க.......
சில நாட்களில் “பேட்டை ராமாயணம்” என்கிற சீரியல் துவக்கினார்கள் . அதன் இயக்குனர் கம்பராமாயண பாடல்களை அப்படியே சொல்வார்... நான் தொறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருப்பேன்...

அது எண்ணுரில் இருக்கும் தாழங்குப்பத்தில் எடுத்தோம்...... நம்ம வாய் எப்பவுமே சும்மா இருக்காதே ஏதாவது கமெண்ட் சொல்லிட்டே இருப்பேன்...... 

ஆச்சியுடன்....



அதில் ஒரு பெரிய டைலாக் ஒரு 1500 அடி இருக்கும் .... 2 முறை ரிகர்சல் பார்த்து ஒரே டேக். ஓகே ஆனது....


1000 கண்ட ஆச்சி....


 நான் செய்யும் சேட்டைகள் இயக்குனரால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை....  ரொம்ப தொல்லை கொடுக்கும் உதவியாளனை வழிக்கு கொண்டுவர இயக்குனர்கள் ஒரு வழியை கையாளுவார்கள்...... அதை தான் அவரும் செய்தார்..
ஒரு நடிகன் உருவாகிறான்...
ஒரு நாள் ஒரு காட்சி ஏரியா கவுன்சிலரை வரவேற்க்கு கூட்டம்...... படத்தில் உள்ளது போல் எல்லா விஷயமும் தாயாரானது..... கவுன்சிலர் யார் என தெரிய வில்லை..... நான் போய் சார். கவுன்சிலர் யாரு சார் என்றேன்........ என்னை மேலும் கீழுமாய் பார்த்தவர்.... நீதான் என்றார்.... எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி போனது.......  அட போங்க சார் என்றேன்..... என்னை தோளில் தட்டி நீதான் போய் காஸ்டியூம் மாத்து என்றார்.......

ஒருவன் நல்ல நடிகனாக இல்லையா என்பதை அவன் கண்கள் கண்கள் சொல்லிவிடும்..... மேக்கப் போட்டு மேடைக்கு வரும் போது சட்டென ஒரு ஐடியா வந்தது.... கூலிங் கிளாஸை எடுத்து மாட்டிக்கொண்டேன்.....  பயத்தை கண்ணாடி மறைக்க தைரியமாக மேடையில் போய் அமர்ந்தேன்..... 

காமிராமேனின் குளறுபடியால் ஒரு 10 டேக் வரை போனது...... அதற்குள் எனக்கு பயமும் போய் இருந்தது.......

இப்படியாக எனது சின்னத்திரை வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது..

உங்களுக்கு சி.ஜே.பாஸ்கர் ஞாபகம் இருக்கிறதா........  ? அவரை அடுத்த பகுதியில் சந்திக்கலாம்....!









Friday, March 9, 2012

பண்டிகை.....?



                பண்டிகை நாட்கள்
( மொதல்லியே சொல்லிடறேன் நா ரொம்ப சீரியஸான ஆள் )


அம்மாவிடம் அடம் பிடித்து வாங்கிய 5 ரூபாய் ரொம்ப அழுக்காய் இருந்தது..
இப்பவோ அப்பவோ கிழிய காத்திருந்தது.... கடை வரைக்கும் இதை பத்திரமாக கொண்டு போக வேண்டும்.... கடைக்காரன் இது செல்லாது என சொல்லாதிருக்க வேண்டும்.... முக்கியமாக இது தொலையாது இருக்கனும்.....


கடலை மிட்டாய் துணுக்குகளுக்காக எலி என் கால் சட்டை பாக்கெட்டை கடித்து குதறி இருந்தது.
அது ரொம்ம நல்ல எலி..... மேல் பக்கத்தை விட்டு விட்டு பாக்கெட்டை மட்டும் கடித்திருந்தது..... 
எப்படியும் துவைக்கும் போது கண்டு பிடித்துவிடுவார்கள்...


அந்த 5 ரூபாயை பாக்கெட்டில் வைக்க முடியாது.... மேல் சட்டையில் பாக்கெட் இருந்ததா என் ஞாபகம் இல்லை...... கையில் வைத்து இறுக்கி மூடி... என ஜாவா மோட்டார் சைக்கிளை ஸ்டாட் செய்தேன்... அதில் சீராக வரும் டட்.... டட்... டட்... எனக்கு ரொம்ப பிடிக்கும். பெரியவனாகி வாங்கற சம்பளத்துல.... மொதல்ல ஒரு “ஜாவா” ... அதுக்கு முன்னாடி அம்மாவுக்கு ஒரு மூட்டை சக்கரை காபிக்குதான்..அதுக்கு மின்னாடி அப்பாக்கு ஒரு லாரி சார்மினார் சிகரெட்.... அப்பா சிகரெட் பிடிப்பதே அழகாய் இருக்கும்...அதுக்கு முன்னாடின்னு... எனக்கு நிறய கனவுகள் இருந்தது...


ஹாரனில் வைத்த கையை எடுக்காம ஓட்டி நிறய பேரை மிரட்டுவேன் ... (இப்ப என் வண்டிக்கு பின்னாடி ஹார்ன் அடிச்சி திட்டு வாங்கினவங்கள்ல நீங்களும் இருக்கலாம்)...


அந்த பட்டாசு கடை முன் வண்டியை நிறுத்திவிட்டு.. பார்த்தால் ஏற்கனவே பட்டாசு வாங்கியவன்
சரக்கை சரிபார்த்துக்கொண்டிருந்தான்..... அவன் பையன் கையில் இந்த வானத்துல போய் வெடிச்சு பூ...பூவாகொட்டுமே அது பெரிய பாகெட் வைத்திருந்தான்....


கையில் இருந்த 5 ரூபாய் மேலும் கசங்கி ஈரமாக இருந்தது.... உள்ளங்கையில வேர்த்தால் ‘காசு’கையில தங்குமாமே உண்மையா....... ? 

கம்பி மத்தாப்பு பெரியது...5.... சின்னது......5 ராக்கெட் பெரிசு ...10..... ரோல் கேப் 5 டஜன்..... அவர்கள் லிஸ்ட் நீண்டு கொண்டே போனது.....


அவர்கள் நகர்ந்தபோது இருப்பதிலியே பெரிய பாம் பாக்கட்டை கையில் எடுத்து என்ன விலை என கேட்கும் முன் ‘என்ன சொல்லுட்டா...... என்றார்.... 

அந்த பையன் என்னை பார்த்து சிரித்தது போல இருந்தது..
கை தானா பாம் பாக்கெட்டை இருந்த இடத்தில் வைத்தது.....
வாய் .... ரெண்டு கேப் ரோல் என்றது....
ம்....
ஊசி வெடி ஒரு பாக்கெட்....
பாம்பு மத்தாப்பு ஒரு பாக்கெட்.....(கொசு ஒழியுமாம் அம்மா சாய்ஸ்)
பட்டாசு ரகத்திலியே ரொம்ப மொக்கையானது அது தான் ..... கரி என்ஜின் ரயில் வண்டி மாதிரி புகை மட்டும் தான் வரும்... பெரியவனானா அத கண்டு புடிச்சவன ஒரு வாட்டி பாக்கனும்...


ம்... அப்புறம்.....
எவ்வளவு ஆச்சி..... அந்த கடையில் அப்ப விலை பட்டியல் இல்லை
துப்பாக்கி வருமா.... 5 ரூபாயை நீட்டினேன்....


எட்டாக மடித்து இருந்த நோட்டை அவர் அதை மெல்ல பிரித்து ... உயரே தூக்கி பார்த்தார்....
என் நல்ல நேரம்.... 
துப்பாக்கி வராது.... இந்தா என்று ஒரு போல்ட் நட் கொடுத்தார்......


ஒரு போல்ட் நட் இரண்டு வாசர் வைத்து இருக்கும்..... உங்கள் யாருக்காவது அது ஞாபகம் இருக்கா..... நட்டை லேசா லூஸ் பண்ணி வாசர்களுக்கு இடையில் கேப் வைத்து மெல்ல அதை டைட் பண்ணி வீசி தரையில் எறிந்தால் வெடிக்கும்...... கிட்டத்தட்ட “கையெறி குண்டு ”மாதிரி...



இதை கொண்டு வந்து வீட்டு வாசலில் .... சுவத்தில் வீசி நா பன்ற அட்டகாசம் தாங்க முடியாது.....

ஊசி வெடிய கையிலயே புடிச்சி வெடிப்போம்.....


ம்... அப்புறம் பெருசானா பசங்கள பட்டாசு கடைக்கு கூட்டிட்டு போய் .... என்ன வேனுமோ வாங்கிக்கங்கன்னு சொல்லனும்னு நினைச்சுக்குவேன்.....


பண்டிகைக்கு அம்மா எண்ணை சட்டி வைப்பார்கள்..... வடை சுட தான்......


நிறய இனிப்புகள் இருக்கும்... லட்டு.... மைசூர் பாக்கு...சோமாஸ்... தேங்கா பர்பி.... முறுக்கு....
எல்லாம் அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து வரும்......


கடைசி நேரத்தில் ரெடிமேட் டவுசர் (கொஞ்சம் முன்னபின்னதான் இருக்கும்) சட்டை கிடைக்கும்... யாருடைய ஸ்பான்சரிலாவது....


இப்படியாக எங்களின் பண்டிகை நாட்கள் கழியும் அப்போதெல்லாம்......




பின் குறிப்பு.......


மாமியார் ஜாமீன் கையெழுத்தில் முதல் முதலாக ஒரு டிவிஎஸ் 50 (சாம்ப்) TN 04 Z 3250 
வாங்கினேன்..... ஜாவா மார்கெட்ல இல்ல....


சக்கரை விலை காரனமாக ஒரு மூட்டை சக்கரை வாங்கவே முடியாமல் போனது.....


சக்கரைக்கே அந்த கதின்னா ஒரு லாரி சிகரெட்....?......( அப்பாவுக்கு என எதுவும் செய்ய முடியாமல் போனது..............அவரின் கடைசி யாத்திரை செலவை த்தவிர) ...அப்பாவின் ஞாபகமாக எனக்கு தொற்றிக்கொண்டது சிகரெட் பழக்கம்...


பசங்கள அழைச்சிட்டு பட்டாசு கடைக்கு போகவே முடியல..... காரணம் எனக்கு இரண்டும் பெண்கள்.... ( காச கொடுதா போதும் இப்ப எல்லாம் துணியும் மணியும் அவர்களே வாங்கி கொள்கிறார்கள் .... நம்பள விட செலக்‌ஷன் நல்லாவே இருக்கு)



இப்போது அம்மா எண்ணை சட்டி வைப்பதில்லை மருமகளை வைக்க சொல்லி விட்டார்கள்.. இப்பவும் முதல் வடை எனக்கு தான்....


அடுத்தது என்ன பண்டிகைப்பா வருது........ சமீபமா........





Thursday, March 8, 2012

தட்டு........ (சாப்பாட்டு தட்டு தான்....)



தட்டு....


அப்பாவின் சைக்கிள் மணி சத்ததிற்காக காத்திருந்த காலம் அது.
எனக்கு ‘தூக்கனாம்சாமி’ன்னு பேர்..... காரணம் 7 மணி ஆனால் எனக்கு 
தூக்கம் வந்துவிடும்....... 
(இப்ப எல்லாம் லேட்டா தான் தூக்கம் வருது.... ஆனா முழிப்பு மட்டும் 5.30 
மணிக்கே வந்துடுது.....)
அதுனால எனக்கு மட்டும் சாப்பாடு முதலில் போட்டு விடுவார்கள்....
அப்பா வேலையில் இருந்து வரும் போதெல்லாம் கையில் ஏதாவது
தீனி பொட்டலம் இருக்கும்.....
எங்கள் ஐந்து பேருக்கு அம்மா தான் பங்கு வைப்பார்கள்...
நான் எங்கள் வீட்டில் 4வது ஆள்....  தெரிந்தோ தெரியாமலோ வைக்கும்
பங்க்கில் ஒன்னு கூடுதலாக இருக்கும்......அது எனக்கு தான் கிடைக்கும்....
தங்கை என்னை விட சிறியவள் இருந்தாலும் எனக்கு தான்......அது....

வழக்கம் போல் அப்பா ஒரு பார்சலோடு அன்று வந்தார்.....
அது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது......செய்தி தாளில் சுத்தி இருந்தது.
நிச்சயம் அது தின்பண்டம் இல்லை என தெரிந்தது...... 

அதை வாங்கி அவசரம் .... அவசரமாக பிரித்தால்.... பளபளப்பாக 
என் முகத்தை அது பிரதிபலித்தது....
அது ஒரு “தட்டு”  ஓவல் ஷேப்பில் இருந்தது.....
கீழே தேயாமல் இருக்க நாண்கு குமிழ்கள் இருந்தது.....
ரொம்ம அழகா இருந்தது......

அழகாய் இருப்பது மேல் எல்லாம் எனக்கு ஆசை வரும்.. 
(இன்னைக்கு வரைக்கும்...?..அது ஒரு பெரிய லிஸ்ட்)

வழக்கம் போல் சில சண்டைகளுக்கு பிறகு
அது எனக்கே கொடுக்கப்பட்டது..... விலை ஸ்டிக்கரை கூட பிரிக்காமல்
அன்று இரவு சாப்பிட்ட பால் சாதம்.....? சுவை இன்று வரை நாக்கில் இருக்கிறது..

கொஞ்ச நாள் நானே அதை கழுவி .... மற்ற தட்டுகளோடு வைக்காமல்....
வைத்தால் கீரல் விழும் இல்லயா....பாதுகாத்தேன்.....

சென்னைக்கு ஓடிவரும் வரை அதில் தான் சாப்பாடு.......ஓடி வரும் அவசரத்தில்
தட்டை மறந்து போனேன்..... ஒரு எட்டு மாதம் கழித்து அது என்னிடம் வந்து சேர்ந்தது....

நம்பினால் நம்புங்கள்
அன்றிலிருந்து இன்று வரை..... அந்த தட்டில் தான் என் உணவு.....
எனக்கு இந்த தட்டின் மீது தீராத காதல் உண்டு....

ஒரு 42 - 43 வருஷமா ..ரொம்ப ஆச்சரியமா இருக்கு......
கீழே இருக்கும் குமிழ் கூட அப்படியே தான் இருக்கிறது....
ஒரு முறை கோவத்தில் (போதையில்)சோறோடு அதை விசிறி அடித்திருக்கிறேன்.....
அதற்க்காக அது எனக்கு அன்னதை குறைத்தது இல்லை..

ஒரு வருடம் மாமியார் வீட்டில் இருந்த போது கூடஅதில் தான் .......
மனைவி- பிளைகள் என்னை ஒரு மாதிரியாக பார்பதும் உண்டு.....
சாதாரண தட்டுக்கே நாம இவ்வளவு சென்சிட்டிவா இருக்கமே....?
அன்னலட்சுமி......
அடுத்த முறை சாப்பிடும் போது தட்டை ஒரு முறை பாருங்கள்.....
இன்னும் எத்தனை நாள் அதில் உணவு உன்ன போகிறோம் என்பது
அதில் தெரியும்.....

Tuesday, January 3, 2012

கவிதகள்




காதலுக்கு மரணமில்லை.....
கல்லரையில் என்னை புதைத்து விட்டு .... 
திரும்பி பாருங்கள்... 
அதன் மீது முளைத்திருக்கும் 'புல்' லில்.... 
என் காதல் மிச்சமிருக்கும்.....






Thursday, December 15, 2011

வாய்ப்பு தேடி அலைந்த கதை...3








அவர் என்னை அழைத்ததே ஒரு கதை.....


அவரிடம் இருந்து அழைப்பு வரும் என காத்திருக்கும் போது... 
அவரின் “சித்தி” முடியும் தறுவாயில் இருந்தது..... அதற்கு ஒரு விழா 
எடுக்க போவதாக தகவல் வந்தது..... அது போதாதா......!


மீண்டும் ஒரு கடிதம் எழுதி அதை அஞ்சலில் அனுப்பினேன்......
உடனே பதில் வந்ததா என கேட்கக்கூடாது.......!
(டேய்...டேய்...இது ஓவர்.....)  


இல்ல கேள்வி வரும் எனக்கு தெரியும்.....!
ஆனா பதில்.....?


விழா நடந்து முடிந்தது .... என கேள்விப்பட்டேன்..... அதற்க்குள் ஒரு
துயரமான சம்பவம் நடந்தது.....


என்னை கேள்விகள் ஏதும் கேக்காமல் ...... என் போக்கில் வளர விட்ட என்
தந்தை காலமாணார்.. ... பொதுவாக அம்மாவை பற்றி எல்லாரும் நிறைய 
செய்திகளை பகிர்ந்து கொள்வார்கள்.... 


அப்பாவை பற்றி........யாரும் சொல்லவதில்லை... ஆனால்
”அபியும் நானும்” படம் ஒரு நல்ல உதாரணம்.....
அப்பாவுக்கும் ஒரு தனி கலர் உண்டு.....
அதைப்பற்றி இன்னெரு சமயத்தில் சொல்கிறேன்...


மைண்ட் சட்டென ‘பிளாங்’ ஆனது......எதிலும் மனசு செல்லவில்லை...


எங்க அக்காவின் கணவர்.... மாமாஅவருக்கு ஒருவரை தெரியும் .... என்றும்..
அவர் விண் டிவியில் நல்ல இடத்தில் இருப்பதாகவும்... அவரை போய் பார்...
என்றார்....


ஒரு கணம் மீண்டும் தலை சுத்தியது.... மறுபடியுமா....?
பார்க்கவில்லை என்றால் மாமா கோவிப்பார்.... பார்த்தால்... என்னை நான் 
அறிமுகம் செய்து கொண்டு....மாமாவை பற்றி சொல்லி.... நட்க்கிற காரியமாக
எனக்கு தெரியவில்லை.....


மாமாவயும் அழைத்து சென்றால் இந்த அறிமுக படலம் கட் ஆயிடும் .....
நம்ம விஷயத நாம சொல்லிக்கலாம் என்று....மாமாவை அழைத்துக்கொண்டு
அவர் அலுவலகம் செனறேன்...


அப்போது அவர்கள் டெலிகாஸ்ட் தெடங்கவில்லை... டெஸ்ட் ரன் ஓடிக்கொண்டிருந்தது..
அலுவலகம் மிகுந்த பரபரப்பாய் இருந்தது......வரவேற்பு ஹாலில் மாமாவை அமர 
வைத்து நான் நின்று கொண்டிருந்தேன்...


9 மணிக்கு நாங்கள் அங்கிருந்தோம்.... 11 மணி ஆகியும் அவர் வர வில்லை...
அவர் பெயர் ஃபிளரண்ட் பெரைரா... அங்கு சி.ஈ.ஓ... பெரிய பதவி....அதுவே
மாமாவுக்கு அங்கு போய் தான் தெரியும்...


எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது...... அதற்கு காரணம்...


அவர் மாமாவை நினைவு வைதிருக்க வேண்டும்...ஏனெனில் அவர் மாமாவின்
அப்பாவிடம் ஆங்கிலம் படித்தவராம்...  இது வாத்தியாரையே மறந்துவிட்ட காலம்..
அவர் பையனை ஞாபகம் இருக்குமா....?


அப்போது அது நடந்தது.....பரபரப்பாய்யும் ...ஸ்டெய்லாகவும் ஒருவர் உள்ளே வர
அவர் பின்னாடி கிட்டதட்ட ஓடி வந்தனர் சிலர்.... வரவேற்பு அறையில் இருந்த
அனைவரும் எழுந்து நிற்க.....


அவர் அங்கு நின்று கொண்டிருந்த அனைவர் மீதும் ஒரு மின்னல் பார்வை வீசினார்...
மாமாவின் மீது ஒரு கணம் பார்வையை நிலைக்கவிட்டு........
“அண்ணே” என்று கூப்பிட்டு கட்டி அணைக்காத குறையாக அவர் கையை பிடித்து
உள்ளே அழைத்து கொண்டு போனார்... நான் வெளியில் நின்று கொண்டிருந்தேன்...


ஒரு நிமிடம் அந்த இடம் அதிசயப்பட்டு போனது.... என்னை சிலர் பொறாமையாக
பார்ப்பதை உணர முடிந்தது... நான் தலையை குனிந்து கொண்டேன்....
அட மாமா இவ்வளவு பெரிய ஆளா....?


ஒரு 20  நிமிடம் கழித்து ஒரு ஆள் வந்து உள்ளே அழைப்பதாக சொன்னார்...


எனக்கு ஒன்னுமே தெரியாது.....


உள்ளே போனால் மாமா டீ குடித்தபடி “பழங்கதை” பேசிக்கொண்டிருந்தார்...
நான் வந்து நின்றதை அவர்கள் கவனித்ததாக தெரியவில்லை... நீண்ட நேரம்
கழித்து ‘யாருப்பா’ என்றார்.... அப்போது தான் மாமாவும் என்னை திரும்பிப்பர்த்தார்..


நா சொன்ன மச்சான் இவன் தான்.... எப்ப பாரு சினிமா... சினிமான்னு தான் அலைவான்....
என்றார்...  எனக்கு தலையில் கல்லை போட்டது போல் இருந்தது
இரண்டாவது குண்டையும் தூக்கி போட்டார்...இவன் நிறய கவிதை கூட எழுதுவான்னு..
(அவை எல்லாம் எனக்கே பிடிக்காதவை என்பது அவருக்கு எப்படி தெரியும்)


அவருக்கு அது புரிந்தது..... நா பாத்துக்கறேன்னே....’ நீ நாளைக்கு வந்து பாருப்பா...! என்று 
விடை கொடுத்தார்...


நல்ல வேலை ஒரு மாசத்துக்கும்.....ஒரு நாளைக்கும் நிறைய வித்தியாசம் இருக்குல்ல...!


மாமா ... மச்சானுக்கு வேலை வாங்கி கொடுத்த சந்தோஷத்தில் ... ஊருக்கு கிளம்பினார்...


மறு நாள்.. அதே வரவேற்பு ஹால்...... அதே பரபரப்பு.... அதே கூட்டம்......அதே பார்வை.....
நான் சினேகமாக அவரை பார்க்க...... அவர் என்னை பார்க்கவே இல்லை... உள்ளே போய் 
விட்டார்... தகவல் சொல்லலாம் என்றால் என்னவென சொல்வது என்பதில் எனக்கு
குழப்பம்.... நான் சொல்லும் விஷயங்களை சொல்பவன் அப்படியே சொல்ல வேண்டும்.... 


காத்திருப்பது தான் நமக்கு பழகி போன ஒன்றாயிற்றே.... காத்திருந்தேன்.......


2 மணிக்கு வெளியே வந்தார்......போனார்....... 6 மணி வரை வரவே இல்லை...


மீண்டும் அடுத்த நாள்... அதற்கு அடுத்த நாள்... இன்னெரு நாள்..... நாள் தவறாமல் நான்
அஙகு போவதும் வருவதுமாக இருந்தேன்....


சில நாட்கள் என்னை யார் என கேட்பார்.... நானும் முதலில் இருந்து..... சொன்னதும்......ஓ.....
யெஸ்.....யெஸ்...  வெயிட் பண்னு எனறு சொல்லி விட்டு போவார்..... பின் அதை மறந்து போவார்....


ஒரு நாளும் அவர் என்னை உள்ளே அழைத்தது இல்லை..... என்னைப்பற்றி அவர் கேட்டதே
இல்லை.... அதற்கு அவருக்கு நேரமும் இல்லை.....!


முழுசா ஒரு மாசம் நடையா .... நடந்தேன்.......(பாரகன் செப்பல்ஸ் தான் தேய்ந்தது).................?


அன்று ஒரு முடிவோடு காலையில் போனேன்...... வந்தார் ...... பார்த்தார்........
வெயிட்...... என்றார்... வெளியே போனார்.... 2 மணிக்கு வந்தார் மீண்டும் ‘ காத்திரு’ என்றார்...
போனார்....... 4 மணிக்கு திரும்பவும் வந்தார்.... உள்ளே போனார்... 5 மணிக்கு வந்தார்......
என்னை பார்த்தார்... அதே ” காத்திரு ”............! அது வழக்கமான ஒன்று தான்....?


அந்த அலுவலகம் 5வது மாடியில் இருந்தது... கீழே வந்து ஒரு சிகரெடை ஆழமாக இழுத்தேன்..
என்ன பண்ணலாம் இருக்கலாமா.... போய் நாளைக்கு வரலாமா.... குழப்பம்.....குழப்பம்...
ஒரு முடிவோடு 5 மாடிகளை படிஏறி கடந்தேன்....


வரவேற்பு அறையில் கூட்டம் குறைய ஆரம்பித்தது.....கடைசியாக ரிசப்ஷனிஸ்ட் எழுந்தார்....
என்னை ஒரு மாதிரியாக பார்த்து....’ காத்திருக்க போகிறிர்களா’ என்றார்.. நான் ஆம் என்றேன்...
சிரித்தபடி வெளியே கிளம்பினார்(ள்)....


கடந்த ஒரு மாதமாக அந்த அலுவலக்த்தில்....பிளாரண்ட் சார் தவிர அனைவரும் ......! ஆம்..
அனைவரும் எனக்கு பழக்கமாகி இருந்தனர்...


மணி 6.30.......7.00........7.30.......8.00.......8.30........9.00.........9.30......... நான் காத்திருந்தேன்.....!


அடுத்த 
வரிக்கு
போகுமுன் 
அன்னிக்கு
நான் 
எத்தனை 
மணி 
வரை காத்திருந்தேன்.....
என்று 
உங்களால் 
யூகிக்க முடியுமா....?


அதிகமில்லை ஜெண்டில்மேன்.....!
இதோ அந்த நேரம் வந்து விட்டது....?


சரியாக இரவு 02.00 (அதிகாலை) சேர்மென்.திரு. தேவ நாதன் வெளியே வந்தார்....
(இவரைப்பற்றி இன்னொரு பகுதியில் சொல்கிறேன்)
ஒரே ஒரு நொடி என்னை பார்த்தார்.... 
பின்னால் பிளாரண்ட் வந்தார்...... அவர் முகத்தில் ‘ஷாக்’ ... நீ இன்னுமா வெயிட் 
பண்ற.... என்றார்..... அதில் எனக்கு புரிந்தது.....!


 நீங்க தான் சார் வெயிட் பண்ண சொன்னிங்க என்று அவர் மீதே பழி போட்டேன்...


கடிகாரத்தை பார்த்தார்.... என்னை பார்த்தார்.......


இண்டர்வியு இல்லை...!  என்ன வேலை என தெரியாது... !
எனக்கு என்ன தெரியும் ....!  என்று............அவருக்கு தெரியாது.....
மாமாவும்....அவர் அப்பாவும்.... ஞாபத்தில்வந்திருக்க வேண்டும்......!


உடனே முடிவெடுத்தார்.... அது தான் அவர்....!


நீ நாளைக்கு ஜாயின் பண்ணிடு ...... சொல்லிவிட்டு வேகமாக வெளியே போனார்.....


நான் தேதியை பார்த்தேன்.....02.02.2002....


சந்தோஷத்தையும் மீறி மிகுந்த களைப்பாய் உணர்ந்தேன்....


உங்களுக்கு தூக்கம் வரல....... போய் படுங்க....!


மீண்டும் சந்திப்போம்.....



























பழங்கதை - 6

கோடம்பாக்கம் காவல் நிலையம் ......!...?


கண் விழித்து பார்த்தால்......ஒரு நிமிடம் எங்க இருக்கோம் ...இது என்ன இடம் .
என்று புரியவில்லை ........?  ரிவைண்ட் பண்ணி பார்த்தால்.... 
முதல் நாள் நடந்த நிகழ்வுகள்  ஞாபகம் வந்துபோனது .. 
அதற்குள் இரண்டாவது அடி அடிக்க பிரம்பை ஓங்கியபடி ஒரு காவலர் ....
கூட இருந்தவர் ... எங்கள் பெட்டியை திறக்க முயன்று கொண்டிருந்தார் ....

அனைத்தும் சட்டென உரைக்க ....எழுந்து  மலங்க மலங்க  விழித்தபோது ...
என்னங்கடா முழிக்கறீங்க ..என்ற கேள்வி வந்தது ...
1952  பராசக்தியில.. சிவாஜி  கிட்ட கேட்ட அதே கேள்வி .. அதே பதிலை சொல்ல ....
தொண்டை வரை வந்ததை முழுங்கிவிட்டு ...
பரிதாபமாக அவரை பார்க்க, அவர் கடமையில் கருத்தாக இருந்தார் ....
பெட்டியை தூக்கி தன் தோள்மீது வைத்துக்கொண்டு நடங்கடா என்றார் ....
எங்கே என்று கேட்டபோது ...திரும்பி ஒரு முறை முறைத்தார் ...

வாய்மேல் கைவைக்காத குறையாக ....அவர்கள் பின்னால் நடக்க ஆரம்பித்தோம்.
காலையில் நடந்தே போன அதே பாதையில் இப்போது சைக்கிள் பயணம்.
ஆளுக்கு ஒருவரை முன்னால் உட்காரவைத்துக்கொண்டு
கோடம்பாக்கம் காவல் நிலையம் நோக்கி சென்றனர்.

சீட்டுக்கு அடியில் லத்தியை வைத்துக்கொண்டு ...அப்போதெல்லாம் காவலர்களுக்கு
சைக்கிள் பயணம்தான் .அது நல்ல தேகபயிற்சியாகவும் இருந்தது.  அதை இப்போது
உணரமுடிந்தது ...காரணம் இருவருமே நடுத்தர வயதை தாண்டியவர்கள் .  லேசாக
தொப்பை எட்டிப்பார்க்க ஆரம்பித்திருந்தது ... அவர்கள் மூச்சு வாங்குவதை கண்டபோது ..,
அந்த அகால வேளையிலும் சிரிப்பு வந்தது..

ஸ்டேஷன் போய் சேர்ந்ததும் ...பெட்டியை ஒரு ஓரமாக வைத்துவிட்டு ..பாத்ரூம் போய்
வந்தனர்.   வந்ததும் ஒருவர் அங்கு இருந்த பெஞ்சில் படுத்துவிட்டார் ....
இன்னொருவர் எங்கள் பெட்டியை எடுத்துக்கொண்டுபோய் இன்ஸ்பெக்டர்
அறையில் வைத்துவிட்டு வந்து ....

ஒரு பெரிய பெஞ்சியை காண்பித்து அதில் படுத்துக்கொள்ள  சொன்னார்.....
நாங்கள் பரிதாபமாக பார்க்க .... ? ஐயா வந்தவுடன் போகலாம் என்றார்.
நண்பன் படுத்து தூங்க ஆரம்பித்தான் ...எனக்கு தூக்கம் கலைந்துபோயிருந்தது ....!

கோர்ட்.....ஜெயில்.... எல்லாம் சம்பந்தா.....சம்பந்தம் இல்லாமல் வந்து போனது..

நள்ளிரவு அல்லது முன் காலை 3 மணிக்கு .... அவரு சொன்ன அந்த ஐயா வந்தார்..
கீழ் பார்வையால் எங்களை பார்த்து.....தானா காரரிடம் ... கண்களினால் ஏதோ
சொன்னார்.......

(முடிந்தால் இது பற்றி ஏதாவது காவல் துறை அதிகாரியிடம் கேட்க வேண்டும்...)
அவர் உள்ளே போய் அமர சிறிது இடைவெளி கொடுத்து... என்னை பார்த்தார்...
இந்த பார்வைக்கு எனக்கு உடனே அர்த்தம் புரிந்தது.... நண்பனை தட்டினேன்..
உடனே எழுந்தான்.... அப்போது தான் தெரிந்தது அவனும் உறங்கவில்லை என்று...!

உள்ளே எங்கள் பெட்டி கலைக்கப்பட்டிருந்தது..... எதுக்கும் உதவும் என்கிற நினைப்பில்
கொண்டு வந்திருந்த .... பள்ளி சான்றிதழ்களை அவர் (சரி...?) பார்த்துக்கொண்டிருந்தார்...

என்னுடைய மூன்றாவது காதலிக்கு ..கொடுக்க.  (அப்படி நான் நினைத்துக்கொண்டிருந்த)
 ஹாட்டின் டாலர் வைத்த செயினைஅந்த தானாகாரர் பாக்கெட்டில்
நுழைத்துக்கொண்டிருந்தார்.. எனக்கு பகீரென்றது.... கூடவே சிரிப்பும்....
10 ரூபா செயினயே இந்த ஆள் இந்த அமுக்கு... அமுக்கறானே அதுவே தங்கமா
இருந்தா.... என்ன செய்வான் என்கிற நினைப்பு ஓடிக்கொண்டிருந்தது...

‘யாருது இது’ என்று சூட்கேஸ்-ஐ தட்டினார்...ஐயா...

அது ஒரு விலை உயர்ந்த.. முழுவதும் தோலினால் செய்யப்பட்ட..... 5 பேர் கொண்ட
ஒரு குடும்ப்திற்கான பொருட்களை கொண்டு செல்ல கூடிய தோல் பெட்டி....

நண்பன் அது தன்னுடையது என்றான்....

ஐயா கேட்ட கேள்விகளுக்கு... சலிக்காமல்.... சளைக்காமல் பதில் சொன்னோம்...
ஐயாவுக்கு திருப்தி ஏற்பட்ட போது மணி 5 ஐ தொட்டது....  எங்களை போகச்சொன்னார்.

அவர்கள் கலைத்துப்போட்ட எங்கள் .... பொருட்களை மெதுவாக .... மிக மெதுவாக
அடுக்கினோம்..... அவர்கள் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தனர்...

பெட்டியை மூடி... செயின் எடுத்தவரிடம் கையை நீட்டினேன்..... ஒன்றும் தெரியாதவர் போல்
என்னை பார்ப்பதாக நினைத்துக்கொண்டு.....ஐயாவயும்.... என்னையும் மாறி. மாறி...
பார்த்து திருட்டு முழி முழித்தார்....

ஐயா... ‘என்ன...? என்று கேட்டார்......(ஐயாவாச்சே....!)

நான் ஐயாவை பார்த்து...   ”செயி.......... முடிக்கும் முன்னதாக செயின்
என் கைக்கு வந்திருந்தது..

(   முடிந்தால் இந்த செயினை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்................?    )

ஐயாவுக்கு உள்ளுக்குள் அடக்க முடியாத சிரிப்பு. முகத்தைவிரைப்பாக வைத்துக்
கொள்வாதாக நினைத்துக்கொண்டு..... நேரா ஊருக்கு தான் போவனும் நா விசாரிப்பேன்.
என்றார்....

நேராக பஸ்சுக்கு தான் சார் என்று சொல்லி விட்டு கிளம்பினோம்..

நாங்கள் வெளியே வந்த போது அந்த இரண்டு போலீஸ் காரர்களும் கூடவே வந்தனர்..

ஒரு ஹோட்டல் ல ராத்திரி திருட்டு போய் விட்டது.... அதான் விசாரிக்க........!
என்று சொன்னார்.....

நீங்க அந்த பக்கம் போய் இருந்திங்களான்னு .... கேக்க நினைத்தேன்...!

கையில காசு இருக்கா..... ஊருக்கு போக....என்றார் முதல் போலீஸ்..

காசு.... .... வாங்கிட்டு கிளம்ப வேண்டியது தான் சார்..... என்றேன்...

எங்கே என்று அவர்கள் கேட்கவும் இல்லை.. எங்களுக்கும் அது தெரியாது....!

அப்போது பொழுது நன்றாக விடிந்து இருந்தது.... பசி காதை அடைத்தது..... மீண்டும்
மெல்ல நடந்து கோடம்பாக்கம் ரயிலடி வந்தோம்..... காசு இல்லா பயணம் கடற்கரை வரை..!
(இப்போது அது முடியுமா...?)

நண்பனுக்கு தெரிந்தவர்கள் ராயபுரத்தில் இருந்தார்கள்... பீச் ரயிலடியில் இருந்து
ராயபுரம் நடை... அது ஒரு கூரை வீடு.... உள்ளே இருந்து யாரோ வந்து நண்பனை
விசாரித்தார்கள்.....  என்ன போசினார்கள் எதுவுமே காதில் விழவில்லை......

எப்போதுமே பிடிக்காத ரசம் .....! அன்று தேவாமிர்தமாய் இருந்தது.......
முடித்ததும்... தெம்பு வந்தது...

மீண்டும் நடந்து ......பீச் ஸ்டேஷன் வந்து ரயிலேறி சேத்பட் வந்தோம்.... எங்கள் ஊர்
காரர் ஒருவர் அங்கு இருப்பதாக நண்பன் சொன்னான்...... ஏதும் உதவியாக இருக்கும்
என நினைத்தோம்.....

ஆனால் அவர் இல்லை......

சோர்வாக இருந்தது...... மீண்டும் ரயிலேறி..... எக்மோர் வந்தபோது.....
நண்பன் ஊருக்கு போகிறேன்......? என்றான்.....

அதிர்ச்சியாகத்தான் இருந்தது....... நான் ஊருக்கு போகிறதாய் இல்லை...... இனி
எது வந்தாலும் சென்னை தான் என முடிவெடுத்திருந்தேன்....!

சரி நீ கிளம்பு என்று.... சொன்னேன்..... ஊர் வரைக்கும் வா... ஏதாகிலும் காசு ஏற்பாடு
செய்து தருகிறேன் என்றான்.... எனக்கும் அது சரியாகப்பட்டது....

பிறந்து வளர்ந்த மண்..... சட்டென அன்னியபூமியாகி போனது.......

முதல் முதல் கட் அடித்து சினிமா பார்த்தது (சந்திரோதயம்....).....
ஊர் சுற்றியது..... சைட் அடித்த பெண்கள்.....!.... .....நல்ல வேளை எங்கள் கல்லூரி
அப்போது கோ-எட் இல்லை....  பின் சீட்டில் இருந்து அந்த பெண்ணையே
பார்த்துக்கொண்டு படம் பார்த்த  “ரமேஷ்” தியேட்டர்....
புதுப்பாளையம் மெயின் ரோடு....பீச் ரோடு....மைதானம்.....
எல்லாம் மாறி மாறி வந்து போயின....

அந்த ரயில்வேஸ்டேஷன் படிகட்டில் அமர்ந்திருந்தபோது .......!

பிறந்த ஊர் மீது யாருக்கும் பாசமும்... அக்கரையும் இருக்கும்...... ஆனால் அது எனக்கு
இல்லாமல் போனது......! இப்போதும் கூட.....?

இப்போதும் ஒன்றும் குடி மூழ்கி போய்விட வில்லை........ நேராக வீட்டிற்கு போகலாம்......
இரண்டு நாளாய் அம்மா தேடிக்கொண்டிருப்பார்கள்.....  எனக்கு இது தேவையா....?

யோசிக்க நிறைய நேரம் இருந்தது........ கண் முன்னே கலர் கலராய் கனவுகள் வந்து ...
வந்து போனது......

வீட்டில் சண்டை ஏதும் இல்லை...... காசு ஏதும் திருடி வரவில்லை...
அப்பா தண்ட சோறு என்று திட்டியதில்லை..... அளவுக்கு அதிக பாசமழை பொழிய
வளர்ந்தவன்.....

பிறகு ஏண்டா ...... உனக்கென்ன தலையெழுத்தா.... தனியா போய் கஷ்டப்பட....!
யாருக்கும் கஷ்டம் அதுவா வரதில்லை..... நாமா இழுத்து போட்டுக்கறதுதான்.....!

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”........................

மாலை நண்பர்கள் வந்து குசலம் விசாரித்து....... கையில் 57 ரூபாய் கொடுதார்கள்.....!
அது என்ன கணக்கு என்று கேட்காதீர்கள்.....அவ்வள்வுதான் கிடைத்திருக்கும்.....!

இனி என் மரணம் சென்னையில் என்று......மீண்டும் சென்னைக்கு வித்தவுட்டில்
பயணம் துவங்கியது .........

..... குருட்டு தைரியம்....  அசட்டு நம்பிக்கை..... வயசு .......?

பொய் சொல்லகூடாது......... திருடக்கூடாது.... அடுத்தவனை ஏமாற்றக்கூடாது....

உறுதி....... நேர்மை.....தன்னம்பிக்கை...... ரயில் வண்டியின் தடக்....தடக்..... ...............

இருளை விழுங்கியபடி........ விடியலை நோக்கி ரயில் ஓடிக்கொண்டிருந்தது.....

தடக்........ தடக்..... அப்படியே தூங்கிப்போனேன்......

சென்னை எனக்காக காத்திருந்தது.........!