Powered By Blogger

Thursday, December 15, 2011

பழங்கதை - 6

கோடம்பாக்கம் காவல் நிலையம் ......!...?


கண் விழித்து பார்த்தால்......ஒரு நிமிடம் எங்க இருக்கோம் ...இது என்ன இடம் .
என்று புரியவில்லை ........?  ரிவைண்ட் பண்ணி பார்த்தால்.... 
முதல் நாள் நடந்த நிகழ்வுகள்  ஞாபகம் வந்துபோனது .. 
அதற்குள் இரண்டாவது அடி அடிக்க பிரம்பை ஓங்கியபடி ஒரு காவலர் ....
கூட இருந்தவர் ... எங்கள் பெட்டியை திறக்க முயன்று கொண்டிருந்தார் ....

அனைத்தும் சட்டென உரைக்க ....எழுந்து  மலங்க மலங்க  விழித்தபோது ...
என்னங்கடா முழிக்கறீங்க ..என்ற கேள்வி வந்தது ...
1952  பராசக்தியில.. சிவாஜி  கிட்ட கேட்ட அதே கேள்வி .. அதே பதிலை சொல்ல ....
தொண்டை வரை வந்ததை முழுங்கிவிட்டு ...
பரிதாபமாக அவரை பார்க்க, அவர் கடமையில் கருத்தாக இருந்தார் ....
பெட்டியை தூக்கி தன் தோள்மீது வைத்துக்கொண்டு நடங்கடா என்றார் ....
எங்கே என்று கேட்டபோது ...திரும்பி ஒரு முறை முறைத்தார் ...

வாய்மேல் கைவைக்காத குறையாக ....அவர்கள் பின்னால் நடக்க ஆரம்பித்தோம்.
காலையில் நடந்தே போன அதே பாதையில் இப்போது சைக்கிள் பயணம்.
ஆளுக்கு ஒருவரை முன்னால் உட்காரவைத்துக்கொண்டு
கோடம்பாக்கம் காவல் நிலையம் நோக்கி சென்றனர்.

சீட்டுக்கு அடியில் லத்தியை வைத்துக்கொண்டு ...அப்போதெல்லாம் காவலர்களுக்கு
சைக்கிள் பயணம்தான் .அது நல்ல தேகபயிற்சியாகவும் இருந்தது.  அதை இப்போது
உணரமுடிந்தது ...காரணம் இருவருமே நடுத்தர வயதை தாண்டியவர்கள் .  லேசாக
தொப்பை எட்டிப்பார்க்க ஆரம்பித்திருந்தது ... அவர்கள் மூச்சு வாங்குவதை கண்டபோது ..,
அந்த அகால வேளையிலும் சிரிப்பு வந்தது..

ஸ்டேஷன் போய் சேர்ந்ததும் ...பெட்டியை ஒரு ஓரமாக வைத்துவிட்டு ..பாத்ரூம் போய்
வந்தனர்.   வந்ததும் ஒருவர் அங்கு இருந்த பெஞ்சில் படுத்துவிட்டார் ....
இன்னொருவர் எங்கள் பெட்டியை எடுத்துக்கொண்டுபோய் இன்ஸ்பெக்டர்
அறையில் வைத்துவிட்டு வந்து ....

ஒரு பெரிய பெஞ்சியை காண்பித்து அதில் படுத்துக்கொள்ள  சொன்னார்.....
நாங்கள் பரிதாபமாக பார்க்க .... ? ஐயா வந்தவுடன் போகலாம் என்றார்.
நண்பன் படுத்து தூங்க ஆரம்பித்தான் ...எனக்கு தூக்கம் கலைந்துபோயிருந்தது ....!

கோர்ட்.....ஜெயில்.... எல்லாம் சம்பந்தா.....சம்பந்தம் இல்லாமல் வந்து போனது..

நள்ளிரவு அல்லது முன் காலை 3 மணிக்கு .... அவரு சொன்ன அந்த ஐயா வந்தார்..
கீழ் பார்வையால் எங்களை பார்த்து.....தானா காரரிடம் ... கண்களினால் ஏதோ
சொன்னார்.......

(முடிந்தால் இது பற்றி ஏதாவது காவல் துறை அதிகாரியிடம் கேட்க வேண்டும்...)
அவர் உள்ளே போய் அமர சிறிது இடைவெளி கொடுத்து... என்னை பார்த்தார்...
இந்த பார்வைக்கு எனக்கு உடனே அர்த்தம் புரிந்தது.... நண்பனை தட்டினேன்..
உடனே எழுந்தான்.... அப்போது தான் தெரிந்தது அவனும் உறங்கவில்லை என்று...!

உள்ளே எங்கள் பெட்டி கலைக்கப்பட்டிருந்தது..... எதுக்கும் உதவும் என்கிற நினைப்பில்
கொண்டு வந்திருந்த .... பள்ளி சான்றிதழ்களை அவர் (சரி...?) பார்த்துக்கொண்டிருந்தார்...

என்னுடைய மூன்றாவது காதலிக்கு ..கொடுக்க.  (அப்படி நான் நினைத்துக்கொண்டிருந்த)
 ஹாட்டின் டாலர் வைத்த செயினைஅந்த தானாகாரர் பாக்கெட்டில்
நுழைத்துக்கொண்டிருந்தார்.. எனக்கு பகீரென்றது.... கூடவே சிரிப்பும்....
10 ரூபா செயினயே இந்த ஆள் இந்த அமுக்கு... அமுக்கறானே அதுவே தங்கமா
இருந்தா.... என்ன செய்வான் என்கிற நினைப்பு ஓடிக்கொண்டிருந்தது...

‘யாருது இது’ என்று சூட்கேஸ்-ஐ தட்டினார்...ஐயா...

அது ஒரு விலை உயர்ந்த.. முழுவதும் தோலினால் செய்யப்பட்ட..... 5 பேர் கொண்ட
ஒரு குடும்ப்திற்கான பொருட்களை கொண்டு செல்ல கூடிய தோல் பெட்டி....

நண்பன் அது தன்னுடையது என்றான்....

ஐயா கேட்ட கேள்விகளுக்கு... சலிக்காமல்.... சளைக்காமல் பதில் சொன்னோம்...
ஐயாவுக்கு திருப்தி ஏற்பட்ட போது மணி 5 ஐ தொட்டது....  எங்களை போகச்சொன்னார்.

அவர்கள் கலைத்துப்போட்ட எங்கள் .... பொருட்களை மெதுவாக .... மிக மெதுவாக
அடுக்கினோம்..... அவர்கள் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தனர்...

பெட்டியை மூடி... செயின் எடுத்தவரிடம் கையை நீட்டினேன்..... ஒன்றும் தெரியாதவர் போல்
என்னை பார்ப்பதாக நினைத்துக்கொண்டு.....ஐயாவயும்.... என்னையும் மாறி. மாறி...
பார்த்து திருட்டு முழி முழித்தார்....

ஐயா... ‘என்ன...? என்று கேட்டார்......(ஐயாவாச்சே....!)

நான் ஐயாவை பார்த்து...   ”செயி.......... முடிக்கும் முன்னதாக செயின்
என் கைக்கு வந்திருந்தது..

(   முடிந்தால் இந்த செயினை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்................?    )

ஐயாவுக்கு உள்ளுக்குள் அடக்க முடியாத சிரிப்பு. முகத்தைவிரைப்பாக வைத்துக்
கொள்வாதாக நினைத்துக்கொண்டு..... நேரா ஊருக்கு தான் போவனும் நா விசாரிப்பேன்.
என்றார்....

நேராக பஸ்சுக்கு தான் சார் என்று சொல்லி விட்டு கிளம்பினோம்..

நாங்கள் வெளியே வந்த போது அந்த இரண்டு போலீஸ் காரர்களும் கூடவே வந்தனர்..

ஒரு ஹோட்டல் ல ராத்திரி திருட்டு போய் விட்டது.... அதான் விசாரிக்க........!
என்று சொன்னார்.....

நீங்க அந்த பக்கம் போய் இருந்திங்களான்னு .... கேக்க நினைத்தேன்...!

கையில காசு இருக்கா..... ஊருக்கு போக....என்றார் முதல் போலீஸ்..

காசு.... .... வாங்கிட்டு கிளம்ப வேண்டியது தான் சார்..... என்றேன்...

எங்கே என்று அவர்கள் கேட்கவும் இல்லை.. எங்களுக்கும் அது தெரியாது....!

அப்போது பொழுது நன்றாக விடிந்து இருந்தது.... பசி காதை அடைத்தது..... மீண்டும்
மெல்ல நடந்து கோடம்பாக்கம் ரயிலடி வந்தோம்..... காசு இல்லா பயணம் கடற்கரை வரை..!
(இப்போது அது முடியுமா...?)

நண்பனுக்கு தெரிந்தவர்கள் ராயபுரத்தில் இருந்தார்கள்... பீச் ரயிலடியில் இருந்து
ராயபுரம் நடை... அது ஒரு கூரை வீடு.... உள்ளே இருந்து யாரோ வந்து நண்பனை
விசாரித்தார்கள்.....  என்ன போசினார்கள் எதுவுமே காதில் விழவில்லை......

எப்போதுமே பிடிக்காத ரசம் .....! அன்று தேவாமிர்தமாய் இருந்தது.......
முடித்ததும்... தெம்பு வந்தது...

மீண்டும் நடந்து ......பீச் ஸ்டேஷன் வந்து ரயிலேறி சேத்பட் வந்தோம்.... எங்கள் ஊர்
காரர் ஒருவர் அங்கு இருப்பதாக நண்பன் சொன்னான்...... ஏதும் உதவியாக இருக்கும்
என நினைத்தோம்.....

ஆனால் அவர் இல்லை......

சோர்வாக இருந்தது...... மீண்டும் ரயிலேறி..... எக்மோர் வந்தபோது.....
நண்பன் ஊருக்கு போகிறேன்......? என்றான்.....

அதிர்ச்சியாகத்தான் இருந்தது....... நான் ஊருக்கு போகிறதாய் இல்லை...... இனி
எது வந்தாலும் சென்னை தான் என முடிவெடுத்திருந்தேன்....!

சரி நீ கிளம்பு என்று.... சொன்னேன்..... ஊர் வரைக்கும் வா... ஏதாகிலும் காசு ஏற்பாடு
செய்து தருகிறேன் என்றான்.... எனக்கும் அது சரியாகப்பட்டது....

பிறந்து வளர்ந்த மண்..... சட்டென அன்னியபூமியாகி போனது.......

முதல் முதல் கட் அடித்து சினிமா பார்த்தது (சந்திரோதயம்....).....
ஊர் சுற்றியது..... சைட் அடித்த பெண்கள்.....!.... .....நல்ல வேளை எங்கள் கல்லூரி
அப்போது கோ-எட் இல்லை....  பின் சீட்டில் இருந்து அந்த பெண்ணையே
பார்த்துக்கொண்டு படம் பார்த்த  “ரமேஷ்” தியேட்டர்....
புதுப்பாளையம் மெயின் ரோடு....பீச் ரோடு....மைதானம்.....
எல்லாம் மாறி மாறி வந்து போயின....

அந்த ரயில்வேஸ்டேஷன் படிகட்டில் அமர்ந்திருந்தபோது .......!

பிறந்த ஊர் மீது யாருக்கும் பாசமும்... அக்கரையும் இருக்கும்...... ஆனால் அது எனக்கு
இல்லாமல் போனது......! இப்போதும் கூட.....?

இப்போதும் ஒன்றும் குடி மூழ்கி போய்விட வில்லை........ நேராக வீட்டிற்கு போகலாம்......
இரண்டு நாளாய் அம்மா தேடிக்கொண்டிருப்பார்கள்.....  எனக்கு இது தேவையா....?

யோசிக்க நிறைய நேரம் இருந்தது........ கண் முன்னே கலர் கலராய் கனவுகள் வந்து ...
வந்து போனது......

வீட்டில் சண்டை ஏதும் இல்லை...... காசு ஏதும் திருடி வரவில்லை...
அப்பா தண்ட சோறு என்று திட்டியதில்லை..... அளவுக்கு அதிக பாசமழை பொழிய
வளர்ந்தவன்.....

பிறகு ஏண்டா ...... உனக்கென்ன தலையெழுத்தா.... தனியா போய் கஷ்டப்பட....!
யாருக்கும் கஷ்டம் அதுவா வரதில்லை..... நாமா இழுத்து போட்டுக்கறதுதான்.....!

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”........................

மாலை நண்பர்கள் வந்து குசலம் விசாரித்து....... கையில் 57 ரூபாய் கொடுதார்கள்.....!
அது என்ன கணக்கு என்று கேட்காதீர்கள்.....அவ்வள்வுதான் கிடைத்திருக்கும்.....!

இனி என் மரணம் சென்னையில் என்று......மீண்டும் சென்னைக்கு வித்தவுட்டில்
பயணம் துவங்கியது .........

..... குருட்டு தைரியம்....  அசட்டு நம்பிக்கை..... வயசு .......?

பொய் சொல்லகூடாது......... திருடக்கூடாது.... அடுத்தவனை ஏமாற்றக்கூடாது....

உறுதி....... நேர்மை.....தன்னம்பிக்கை...... ரயில் வண்டியின் தடக்....தடக்..... ...............

இருளை விழுங்கியபடி........ விடியலை நோக்கி ரயில் ஓடிக்கொண்டிருந்தது.....

தடக்........ தடக்..... அப்படியே தூங்கிப்போனேன்......

சென்னை எனக்காக காத்திருந்தது.........!





















No comments: